தமிழகத்தில் அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. எனினும் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. 

தலைநகர் சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்கிறது. கிண்டி,வேளச்சேரி,அண்ணாசாலை,திருவான்மியூர்,அடையார் உட்பட நகரின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது வரை மழை நீடிப்பதால் சாலைகளில் வாகன நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. காலையில் இருந்து சூரியன் தோன்றாமல் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டு வருகிறது. சென்னையின் சுற்றுப்புற மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டித் தீர்க்கிறது. திருநெல்வேலி,கன்னியாகுமரி,தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பருவமழை நிறைவடையும் தருவாயிலும் கனமழை பெய்வதை காண முடிகிறது. இதனால் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய அணைகள் பல நிரம்பி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனிடையே திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் குமரிக்கடலில் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.