யாரும் எவரும் கற்பனை கூட செய்து பார்த்திராத நாட்கள் இவை. ஒரு முற்றுப்புள்ளியளவு முள்ளுருண்டைக் கிருமி ஒட்டுமொத்த உலகையே முகமூடி அணிய வைத்து விட்டது. 

உலகச் சக்கர கடையாணிகள் எனப்படும் ட்ரம்ப் முதல் சார்லஸ் வரை சகலரையும் கை கூப்பி குனிய வைத்து விட்டது இந்த கிருமி.
  ஹர்தால், பந்த், வேலை நிறுத்தங்கள் உலகுக்கு புதிதில்லை - ஆனால் இன்று போல் உலகின் சகல சாலைகளும் என்றும் எப்போதும்அமைதி கண்டதில்லை. சக்கரம் என்கிற ஒன்று கண்டறியப்பட்ட பிறகே மனிதன் விரிந்தான். அதற்கு முன் வரை அவன் மடித்து வைக்கப்பட்ட ஒரு துணியாகத்தான் இருந்தான். சக்கரங்களே மனிதர்களுக்கு நாடுகளை காண்பித்தன. உலகம் எத்தனை பெரிது என்பதை உணர்த்தின  
இன்று சிறு தள்ளு வண்டிச் சக்கரம் முதல், விமானச் சக்கரம் வரை சகலமும் உருளாது ஓய்வெடுக்கத் தொடங்கி விட்டன. 

மின் உற்பத்தி, பால் உற்பத்தியன்றி ஒரு உற்பத்தி இல்லை. சகல உலோகங்கங்களும் சாந்தியில் திளைக்கின்றன. எந்திர இரைச்சல் 80 பங்கு குறைந்து 20 பங்கும் குறையும் அச்சத்தில் உள்ளோம்.   இந்தப் பேரமைதியை ஒரு கொலைக் கிருமி அளித்துள்ளது தான் முரணுக்கெல்லாம் முரண். புத்தன் யேசு காந்திகளால் ஆகாதது ஒரு கொரோனாவால் ஆகியுள்ளது.  

நம்மை நல்வழிப்படுத்த ஒரு நல்லது பயன் படவில்லை. முட்டிப் போட்டு கதறச் செய்துவிட்டது இந்த கெட்ட கரோனா.  காலையில் காபி குடிக்க குவைத், மதிய உணவுக்கு மலேசியா, இரவு இத்தாலி என்று பறக்க முடிந்தவன் முதல், சந்தடி மிகுந்த மூத்திரச் சந்தின் முனையில் படுத்துக் கிடக்கும் கையாலாகாதவன் வரை சகலரையும் ஒரு நேர்கோட்டில் நிறுத்தி 'வாழ்க்கையே அலை போலே - நாமெல்லாம் அதன் மேலே ,,என்று பாட வைத்து விட்டது இந்த கொரோனா. சோஷலிசம் கேபிடலிசம் கம்யூனிசம் புத்திசம், புத்தியில்லா இசம் என சகலமும் நகம் கடித்தபடியே 55 நாட்களுக்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்கிற கனவில் உள்ளன. ஷேர் மார்க்கெட் புதர் மார்க்கெட் டாகிவிட்டது. 

 பணக்கார திருப்பதி சாமி உண்டியலே வறண்டு காலிப் பாத்திரமாகி விட்டது. சொந்த வீடே ெஜயிலாகும் என்று ஊசி முனையளவுக்காவது யாராவது யோசித்திருப்போமா? அட சென்ட்ரல் ஜெயிலில் யாருக்கு ஜாமீன் வேண்டும் என்று ஜெயிலரே கேட்பதைத்தான் பாத்திருப்போமா?  இன்று அவரவர் ஊருக்கு மே ஒரு தடுப்பு வேலி - மதுரைக்காரன் நான் திண்டுக்கல் செல்லக் கூட இனி விசா தேவைப்படலாம் . கை குலுக்கல் கட்டித் தழுவல் எல்லாம்  இப்போதைக்கு சாத்யமில்லை. தழுவியும் குலுக்கியும் செத்து வைத்தாலோ சுடுகாடு செல்லும் வழியெங்கும் பிணமாலைப் பூக்களைப் போட்டு | போவோர் வருவோர் கால்களை எல்லாம் கூச வைக்கும் கொடுமைக்கும் இடமுமில்லை. பிணங்களை கிரேன்கள் தான் தூக்கிச் செல்லும் - அவர்கள் பொருட்கள் முதல் சகலமும் தீக்கிரையாகும். குறிப்பாக அவர் கைபேசி . அதில் தான் அப்பிக் கிடக்கிறது ஆயிரம் கிருமி.   

இந்த 2020 ல் நாம் வல்லரசாகியிருக்க வேண்டும் .ஆனால் இல்லரசாகியுள்ளோம். பாடம் நடத்துகிறது கொரோனா . ஒரே ஒரு ஆறுதல் 
உலகில் நமக்குத் தான் பாதிப்பு மிகக் குறைவு .  நம்மால் தான் மீளவும் முடியும். இந்த 21 நாட்கள் அப்படி மீள்வதற்கான நாட்களே . இது ஒரு அதீத எச்சரிக்கை .அபூர்வ எச்சரிக்கையும் கூட. இதை உணர்ந்து அடங்கியிருப்போம் | உள்முகமாய் பார்ப்போம் - நமக்கு இது புதிதில்லை. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நில மே சொந்தமடா என்று உணர்ந்து வாழ்ந்தவர் பூமி இப்பூமி. உலகப் பரவலில் மயங்கியதன் விளைவே இன்றைய அகச் சிறை .இது போல் ஒரு 21 நாட்கள் கிடைக்குமா என்பது தெரியாது. கிடைக்கக் கூடாது என்பதல்லவா விருப்பம். எனவே இந்நாட்களை யோக நாட்களாக்குவோம். உயிர்த்தெழுவோம்  பிறக்கப்போகும் தமிழ்ப் புத்தாண்டு சலவை செய்த உலகை நமக்கு தரட்டும். இது ஞானியர் பூமி என்பது நிலைக்கட்டும் என இந்திரா சௌந்தரராஜன் கூறியுள்ளார்.