ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி யின் பெயரை பயன்படுத்தி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த, 4 பேரை, போலீசார் கைது செய்தனர்.

சமீபத்தில் நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று, முதலமைச்சராக பதவியேற்றார்.  இவரது உதவியாளர் நாகேஸ்வர ரெட்டி..

இந்நிலையில், ஆந்திர மாநில அரசியல் கட்சி எம்எல்ஏக்களுக்கு, முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஆகியோரின் உதவியாளர்கள் பேசுவதாக மர்மநபர்கள் சிலர், பண மோசடி யில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஷ்ணுமூர்த்தி என்ற வாலிபர் தலைமையில், சிலர் பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார், விஷ்ணுமூர்த்தியை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்றும், சில வாலிபர்களுடன் சேர்ந்து, நவீன தொழில்நுட்பத்தை வைத்து, வாட்ஸ்அப் மூலம் நம்பர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

அவர் கொடுத்த தகவலின்படி போலீசார், விஷ்ணுமூர்த்தியின் கூட்டாளிகள், தருண் குமார், ஜெய கிருஷ்ணா, ஜெகதீஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உதவியாளர் நாகேஸ்வர ரெட்டி பேசுவதாக கூறி, ஆளும் கட்சி எம்எல்ஏ அப்பலராஜுவிடம், ரூ.15 லட்சம், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உதவியாளர் பேசுவதாக கூறி அவரது கட்சி எம்எல்ஏ பண்டாரு சத்யநாராயணாவிடம் ரூ.10 லட்சம் என்பது உள்பட பல பிரபல அரசியல்வாதிகளின் பெயர்களை கூறி, பல லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. 

மேலும் விசாரணையில், தற்போது செயல்படும் நவீன தொழில்நுட்பத்தில் உள்ள சில குறைபாடுகளை பயன்படுத்தி, பிரபலங்களின் செல்போன் எண்ணின், 'வாட்ஸ் ஆப்' அழைப்பு வாயிலாக மோசடியை செய்தனர் என தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும், போலீசார் கைது செய்தனர்.