சென்னையில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த தனியார் ஏசி பேருந்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

சென்னையிலிருந்து தனியார் ஏசி பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு குமுளி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து பொத்தேரி அருகே வந்துகொண்டிருந்த போது எஞ்சின் பகுதியில் திடீரென தீ பற்றியுள்ளது. இதனை கண்டு பதறிப்போன ஓட்டுநர் உடனே பேருந்து நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, பயணிகள் தங்களது உடைமைகளை அங்கேயே விட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். 

இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும் பேருந்தின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமானது. இந்த விபத்தால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் எஞ்சின் பகுதியில் தீ பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.