கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 1200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்களும் இரட்டை சதமடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50லிருந்து 67ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர். இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 25 வயது இளம்பெண் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

பின்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய அந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6ஆக உயர்ந்துள்ளது. 

இளம் பெண் கொரோனாவிலிருந்து மீண்டிருப்பது தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மீளலாம் என்ற நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.