சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே இருக்கிறது பரனூர் சுங்கச்சாவடி. தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. இங்கு நேற்று முன்தினம் அதிகாலையில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியநிலையில் அரசு பேருந்து ஓட்டுனரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஓட்டுநர், பேருந்தை சுங்கச்சாவடியை மறித்து நிறுத்தினார். இதனால் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனிடையே அந்த வழியாக வந்த அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திரண்டு வந்து தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுனருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அங்கிருந்த சுங்கச்சாவடி அறைகளை அடித்து நொறுக்கினர். இதில் கணினி உட்பட அங்கிருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. பின் போலீசார் வந்து நிலையை கட்டுப்படுத்தினர்.

இந்தநிலையில் சுங்கச்சாவடி முற்றிலும் சேதமடைந்ததால் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் வசூலிக்கப்படாமல் செல்ல அனுமதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து தற்போது வரை வாகனங்கள் இலவசமாக சென்று வருகின்றன. சுங்கச்சாவடி சரிசெய்யப்பட்டு இன்னும் ஒரு வாரம் காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரையிலும் வாகனங்களுக்கு கட்டண வசூல் இருக்காது. இதனிடையே சுங்கச்சாவடியில் இருந்த பணத்தை காணவில்லை என ஊழியர்கள் தற்போது புகாரளித்துள்ளனர்.

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட பிறகு மொத்தம் இருக்கும் 12 பூத்கள் மற்றும் சுங்கச்சாவடி அலுவலகத்தில் இருந்தும் ரூ.18 லட்சம் காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதுதொடர்பாக வழக்குபதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே சுங்கச்சாவடி தாக்கப்பட்டு மோதல் நடந்தது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள், சுங்கச்சாவடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இலங்கை கடற்படை அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் அதிரடி கைது..!