மூன்று நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையே நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நேற்று தொடங்கியது. 

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் போட்டியின் இறுதியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 

அதன்படி, ஹராரே நகரில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக பஹார் ஜமான் 61 ஓட்டங்களும், ஆசிப் அலி 41 ஓட்டங்களும் குவித்தனர். 

அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 17.5 ஓவர்களில் 108 ஓட்டங்களில் ஔட் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் ஆட்டத்திலேயே ஜிம்பாப்வேக்கு ஆட்டம் காட்டியது. 

அடுத்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. இதிலும் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுமா என்று பார்ப்போம்.