இளம் வயதிலேயே செஸ் தொடரில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, தனது சாதனைக்கு பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் ஆதரவே காரணம் என தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த சுரேஷ் பாபு - நாகலட்சுமி தம்பதியின் மகன் பிரக்ஞானந்தா. இவர் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவருகிறார். தனது அக்கா செஸ் விளையாடுவதை பார்த்து செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட பிரக்ஞானந்தா, நாளடைவில் செஸ் போட்டியில் வல்லவராக உருவானார். 

இத்தாலியில் நடைபெற்ற கிரேடின் ஓபன் செஸ் தொடரில், உலகின் முன்னணி மாஸ்டர்கள் பங்கேற்றனர். இத்தொடரில், இந்தியாவின் சார்பில் பிரக்ஞானந்தாவும் கலந்துகொண்டார். ஆரம்பம் முதலே தனது அபார திறமையால் போட்டியாளருக்கு சவால் அளித்தார்.  

8-வது சுற்றில் இத்தாலி கிராண்ட் மாஸ்டரான மொரானி லூகாவை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, மிகவும் கவனமாக காய்களை நகர்த்தினார். இறுதியில் மொரானி லூகாவை வீழ்த்தி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதித்தார் பிரக்ஞானந்தா. 

இதன்மூலம் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா. இவருக்கு முன்னதாக, 2002-ம் ஆண்டு உக்ரைன் வீரர் கர்ஜாகின் 12 ஆண்டு, 7 மாதங்களில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்து வருகிறது. தற்போது, இந்தியாவின் பிரக்ஞானந்தா 12 வயது 10 மாதங்களில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். 

தனது சாதனை தொடர்பாக பேசிய பிரக்ஞானந்தா, தனது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் ஆதரவுதான் தன்னை சாதனையாளராக்கியதாக கூறி நெகிழ்ந்தார்.

தற்போதைய கல்விமுறையும் பள்ளிப்படிப்பும் மதிப்பெண்ணை மட்டுமே மையப்படுத்தியதாக உள்ளது. அதை நோக்கியே மாணவர்களை உந்துகிறது. அதனால் பெரும்பாலான பெற்றோர்களும் பல பள்ளி நிர்வாகங்களும் மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்க தயாராக இல்லை. 

ஆனால் நிறைய மாணவர்களிடம் பிரக்ஞானதாவை போலவே ஏதாவது ஒரு துறைசார்ந்த திறமை புதைந்திருக்கும். அதை பெற்றோரும் ஆசிரியர்களும் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். அப்படி ஊக்குவித்தால் ஒவ்வொரு மாணவரும் சாதனையாளர் ஆகலாம் என்பதற்கு பிரக்ஞானந்தா ஒரு சிறந்த உதாரணம்.