ஊக்கமருந்து தடை விதியை மீறியதாக பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்!
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஊக்கமருந்து தடை விதியை மீறியதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சிறுநீர் மாதிரியை வழங்க மறுத்த நிலையில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவு மூலமாக (NADA) முறையான குற்றச்சாட்டு நோட்டீஸ் பெற்றுள்ளார். இதன் காரணமாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவு மூலமாக மீண்டும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி சோனேபட்டில் நடைபெற்ற தேர்வு சோதனையின் போது ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி அவரை இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஜ்ரங் இடைநீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இதையடுத்து ஒழுங்குமுறை ஊக்கமருந்து எதிர்ப்பு குழுவானது தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவின் குற்றச்சாட்டு அறிவிப்பை வெளியிடும் வரையில் பஜ்ரங் புனியாவின் இடைநீக்கத்தை ரத்து செய்தது.
இந்த நிலையில் தான் தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவு மீண்டும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், இது தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள், 2021 இன் பிரிவு 2.3 ஐ மீறியதாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு மீதான விசாரனைக்கு அல்லது குற்றசாட்டை ஏற்பதற்கு வரும் ஜூலை 11 ஆம் தேதி வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.