உலக சாம்பியன் மாதிரி ஆடாதது வேதனையும், ஏமாற்றமும் அளிக்கிறது என்று ஜெர்மனி அணி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘நம்பர் ஒன்’ அணியும், உலக சாம்பியனுமான ஜெர்மனி அணி நேற்று முன்தினம் நடந்த தனது கடைசி லீக்கில் தென்கொரியாவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறியது.

கடந்த நான்கு உலக கோப்பை போட்டிகளில் குறைந்தது அரையிறுதி வரை வந்த ஜெர்மனி அணி, இந்த முறை குரூப் சுற்றிலேயே பங்கமாக தோற்று வெளியேறியது. வருத்தத்தோடு ஜெர்மனி வீரர்கள் நேற்று ரஷியாவில் இருந்து சொந்த நாட்டுக்கு புறப்பட்டனர்.

ஜெர்மனி அணி நிர்வாகம் சார்பில் அவர்கள் டிவிட்டர் பக்கத்தில், "பிரியமான ரசிகர்களே, உங்களை ஏமாற்றிவிட்டதற்காக நாங்கள் வருந்துகிறோம்.

உலக கோப்பை கால்பந்து போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைத்தான் வருகிறது. அதனால் நாங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால், ஒரு உலக சாம்பியன் மாதிரி ஆடாதது வேதனையும், ஏமாற்றமும் அளிக்கிறது"  என்று அதில் தெரிவித்து இருந்தனர்.