விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கெவின் ஆண்டர்சன், ரோஜர் பெடரர், நீல்சென் - சிலிஸ்பரி இணை, செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று 3-வது சுற்று ஆட்டம் நடந்தது. 

இதில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மற்றும் ஜெர்மனியின் கோல்ஸ்கிரீபர் மோதினர். இதில், 6-3, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கோல்ஸ்கிரீபரை வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார் ஆண்டர்சன்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் லினார்ட் ஸ்டிரப்பை வீழ்த்தினார். 

அதேபோன்று, ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - பிரான்சின் ரோஜர் வாசெலின் இணை 4-6, 6-7 (4-7), 1-2 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் பிரிடெரிக் நீல்சென் இங்கிலாந்தின் ஜோ சிலிஸ்பரி இணைக்கு எதிராக பின்தங்கி இருந்த போது, போபண்ணா காயமடைந்தார். இதனால் அவர் பாதியில் விலக நேரிட்டது. இதனால் நீல்சென் - சிலிஸ்பரி இணை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தன்னை எதிர்த்த பிரான்ஸின் மிலாடெனோவிச்சை 7-5, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.