விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் இன்று தொடங்குகிறது. முதல் சுற்றில் ஃபெடரர் மற்றும் லாஜோவிச் மோதுகின்றனர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் இன்று முதல் வரும் 15-ஆம் தேதி வரை நடக்கிறது.

இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் ரஃபெல் நடால், முன்னாள் சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச், 

குரோஷியாவின் மரின் சிலிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ, ஆஸ்திரியாவின் டொமினிக் திம்  ஆகிய முன்னணி வீரர்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 

முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ஃபெடரர் மற்றும் செர்பியாவின் துசான் லாஜோவிச்சுடன்  இன்று மோதுகின்றனர். நடால் தனது முதல் சவாலை, துடி சிலாவுடன் (இஸ்ரேல்) தொடங்குகிறார்.

ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் இந்தியரான தரவரிசையில் 85-வது இடம் வகிக்கும் யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் இத்தாலியின் தாமஸ் பாபியானோவுடன் மோதுகிறார். 

ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி உள்பட ஆறு இந்தியர்கள் களம் காணுகின்றனர். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அண்மையில் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றிய ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு சாம்பியன் முகுருஜா (ஸ்பெயின்), வோஸ்னியாக்கி (ஆஸ்திரேலியா), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), 

எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), மரிய ஷரபோவா (ரஷியா) உள்ளிட்டோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் ஓடுகிறார்கள். 

இவர்களுடன் குழந்தை பெற்றுக்கொண்டு மறுபிரவேசம் செய்துள்ள 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா) களத்தில் குதித்துள்ளார். முதல் சுற்றில் நெதர்லாந்தின் அரன்ட்சா ரஸ்சை எதிர்கொள்கிரார் செரீனா. 

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.307 கோடியாகும். இதில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.20¼ கோடியுடன் 2000 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும்.

இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பப்படும்.