லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 4ம் வரிசையில் கோலி களமிறங்காமல் ரஹானே களமிறங்கினார். என்ன காரணத்தால் ரஹானே களமிறங்கினார் என்பது குறித்து பார்ப்போம்..

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. 

மழை காரணமாக ஒருநாள் தாமதமாக தொடங்கப்பட்ட லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி 396 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. நான்காம் நாள் ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 289 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் விஜய் டக் அவுட்டானார். அவரை தொடர்ந்து ராகுலும் 10 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து நான்காம் வரிசையில் வழக்கமாக களமிறங்கும் கோலி களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக புஜாராவுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். கோலி ஏன் இறங்கவில்லை என்ற கேள்வி பொதுவாக எழுந்திருக்கும். 

ஏனென்றால், நான்காம் நாள் ஆட்டம் தொடங்கி இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடியபோது, கேப்டன் கோலி களத்தில் 37 நிமிடங்கள் இல்லை. எனவே இந்திய அணியின் இன்னிங்ஸ் தொடங்கி 37 நிமிடங்கள் கழித்துத்தான் அவர் களமிறங்க வேண்டும் என்பது விதி. 2 விக்கெட்டுகள் விரைவாக விழவில்லை என்றால், கோலி வழக்கம்போல 4ம் வரிசையில் களமிறங்கியிருப்பார். ஆனால் 37 நிமிடங்களுக்கு உள்ளாகவே விஜயும் ராகுலும் அவுட்டாகிவிட்டதால் கோலியால் இறங்க முடியவில்லை. அவருக்கு பதில் ரஹானே களமிறக்கப்பட்டு, பின்னர் கோலி இறங்கினார்.