இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்ததும் தோனி நடுவரிடம் இருந்து பந்தை வாங்கியது, அவரது ஓய்வு அறிவிப்பிற்கான முன்னோட்டமாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் தோனி ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் திட்டவட்டமாக கூறிவிட்டார். எனினும் தோனியின் செயல், ஓய்வு அறிவிப்பிற்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டதற்கான காரணம் 2014ல் நடந்த ஒரு சம்பவம் தான். 

இந்திய அணிக்கு மூன்றுவிதமான சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்த தோனி, ஒருநாள் மற்றும் டி20 ஆகிய போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து கடந்த ஆண்டு விலகினார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தோனி ஓய்வு பெற்றார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரராக ஆடிவருகிறார். அவ்வப்போது கடும் விமர்சனங்களை சந்திப்பதும் பிறகு அவற்றிற்கு தனது திறமையால் பதிலடி கொடுப்பதும் தோனிக்கு வழக்கமான ஒன்றுதான். இந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் தோனி மந்தமாக ஆடியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ரசிகர்களே கூச்சலிட்டு தோனியை கிண்டல் செய்தனர். 

இதையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறும்போது, நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கினார். தோனியின் இந்த செயலால், தோனி ஓய்வு பெறப்போகிறார் என்றும் விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பார் என்றும் தகவல்கள் வைரலாக பரவின. 

தோனி பந்தை வாங்கியதால், ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளது என்று பலரும் அனுமானித்ததற்கு தோனியின், இதற்கு முந்தைய செயல் தான் காரணம். தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்காத காலக்கட்டத்தில் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி முடிந்து வெளியேறும்போது தோனி, ஸ்டம்பை எடுத்து கொண்டு சென்றார். அதன்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். 

அதனால், அதைப்போலவே இந்த முறை பந்தை வாங்கிக்கொண்டு வெளியேறியதால், தோனி ஓய்வு அறிவிக்கப்போகிறாரோ? என்ற கேள்வியும் சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.