சமகால கிரிக்கெட்டில் சிறந்த டி20 வீரர் யார் என்று அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கருத்து தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல். தனது அதிரடியான பேட்டிங்கால் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படுகிறார். கிறிஸ் கெய்ல் அடித்து ஆட தொடங்கிவிட்டால், ரசிகர்களின் கண்களுக்கு விருந்து தான். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஷாகித் அஃப்ரிடியை கெய்ல் சமன் செய்துவிட்டார். இன்னும் ஒரு சிக்ஸர் அடித்தால் கூட அஃப்ரிடியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துவிடுவார் கெய்ல். கெய்ல் 476 சர்வதேச சிக்ஸர்களை விளாசியுள்ளார். 

சர்வதேச ஒருநாள் போட்டியில், இரட்டை சதம் விளாசிய 6 வீரர்களில் கெய்லும் ஒருவர். கெய்ல் 215 ரன்கள் அடித்துள்ளார். அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்துள்ளதும் அவர் தான். 2013 ஐபிஎல்லில் புனே அணிக்கு எதிராக 175 ரன்களை குவித்தார் கெய்ல்.

யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கெய்லிடம், சிறந்த டி20 வீரர் யார் என்ற கேள்விக்கு, அவர் நான் தான் சிறந்த டி20 பிளேயர் என தன்னம்பிக்கையுடன் பெருமையாக பதிலளித்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர் யார் என்று வேண்டுமானால் விவாதம் நடத்தலாம். ஆனால் டி20 போட்டியை பொறுத்தவரை நான் தான் சிறந்த வீரர் என பதிலளித்துள்ளார்.