மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அனைத்து காலத்திலும் சிறந்த வீரர்களாக திகழ்பவர்களில் முக்கியமானவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா. சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக கிரிக்கெட் உலகில் மதிக்கப்படக்கூடிய வீரர். தனது விக்கெட்டை வீழ்த்த எதிரணி பவுலர்களை அதிகமாக உழைக்க வைக்கக்கூடியவர். அவ்வளவு எளிதாக தனது விக்கெட்டை கொடுத்துவிட மாட்டார். 

1990-ம் ஆண்டிலிருந்து 2007-ம் ஆண்டுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடிய லாரா, 22 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை குவித்த வீரராக லாரா திகழ்கிறார். லாரா ஒரு இன்னிங்ஸில் அடித்த 400 ரன்களை இதுவரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை. அதேபோல முதல்தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 501 ரன்களை குவித்து ஆட்டமிழக்கவில்லை. இவ்வாறு பல சாதனைகளை சொந்தக்காரராக திகழ்பவர். 

இந்நிலையில், உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த அவர், அதன் பின் இந்தியாவுக்கு வருகை தந்தார். மும்பையில் தங்கியிருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையின் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விரைவில் அவரது உடல்நலன் குறித்து அறிக்கை வெளியாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.