பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிய ஸ்மித்தும் வார்னரும் கனடா குளோபல் டி20 லீக் தொடரில் விளையாடிவருகின்றனர். இந்த தொடரில் சரியாக ஆடமுடியாமல் வார்னர் திணறிவருகிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடையும், பான்கிராஃப்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டது. தவறை உணர்ந்து ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் மனம் வருந்தி கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டனர். எனினும் அவர்களை ஆஸ்திரேலிய ஊடகங்கள் விட்டுவைக்கவில்லை. இருவரையும் கடுமையாக விமர்சித்து எழுதியது. 

இருவரும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகினர். தடை விதிக்கப்பட்டதால் இருவரும் ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. அதன்பிறகு லீக் போட்டிகளில் ஆடலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 

இதையடுத்து ஸ்மித்தும் வார்னரும் கனடாவில் நடந்துவரும் குளோபல் டி20 தொடரில் ஆடிவருகின்றனர். வின்னிபெக் ஹாக்ஸ் அணிக்காக வார்னரும், டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக ஸ்மித்தும் ஆடுகின்றனர். 

டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக ஆடும் ஸ்மித், வான்கூவர் நைட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 61 ரன்கள் குவித்தார். ஆனால் வார்னர் இடம்பெற்றுள்ள வின்னிபெக் ஹாக்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஸ்மித் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

ஸ்மித்தாவது ஒரு போட்டியில் நன்றாக ஆடினார். ஆனால் வார்னரோ இதுவரை ஆடியுள்ள இரண்டு போட்டிகளிலுமே சரியாக ஆடவில்லை. மாண்ட்ரியல் டைகர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் வார்னர். 

இந்நிலையில், டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் ஒரே ரன்னில் வார்னர் அவுட்டானார். இந்த போட்டியில் வார்னர் ஆடாவிட்டாலும் மற்ற வீரர்கள் ஓரளவிற்கு ஆடியதால் அந்த அணி 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டொரண்டோ நேஷனல்ஸ் அணி, 108 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால் வின்னிபெக் ஹாக்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

வார்னர் இடம்பெற்றுள்ள வின்னிபெக் ஹாக்ஸ் அணி, இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வார்னர் இரண்டு போட்டிகளிலுமே சரியாக ஆடவில்லை. இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 2 போட்டிகளில் சேர்த்தே 2 ரன் மட்டுமே எடுத்து திணறிவருகிறார். பெரும் துயரிலிருந்து மீண்டு வந்த வார்னர், வாண வேடிக்கை காட்டுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.