உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டிற்கு குறைவாகவே உள்ள நிலையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே இந்திய அணி வலுவாக திகழ்கிறது. ஆனால் பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் ஆடும் 4வது வரிசை வீரர் மட்டும் உறுதி செய்யப்படவில்லை. 

தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் ரோஹித் சர்மாவும் களமிறங்குகின்றனர். மூன்றாவது வரிசையில் விராட் கோலி இறங்குகிறார். மிடில் ஆர்டரின் பின்வரிசையில் தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் களமிறங்குகின்றனர். 4 மற்றும் 5வது வரிசையில் யாரை களமிறக்குவது என்பதற்கு பல சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வரிசைகளில் களமிறங்குவதற்கு ரஹானே, ரெய்னா, கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே என பல வீரர்கள் உள்ளனர். இவர்களை தவிர்த்து தினேஷ் கார்த்திக்கும் அந்த பட்டியலில் உள்ளார். இவர்களை மாறி மாறி களமிறக்கி சோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த ராகுல், டி20 போட்டியில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்தார். இதன்மூலம் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். டி20 போட்டிகளில் வழக்கமாக கோலி இறங்கும் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ராகுல், சிறப்பாக ஆடினார். இதையடுத்து அனைத்து  டி20 போட்டிகளிலும் அவரை மூன்றாவதாக களமிறக்கிவிட்டு நான்காவதாக இறங்கினார் கோலி.

அதே நிலை ஒருநாள் போட்டியிலும் தொடரும் என்று கூறமுடியாது. எனினும் அணியில் ராகுலுக்கு ஒரு இடம் இருக்கிறது என்பது மட்டும் தற்போதைய சூழலில் உறுதியாகியுள்ளது. எனவே ராகுலும் ரெய்னாவும் மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆனால் ராகுல், டி20 போட்டிகளில் இறங்கியதுபோல மூன்றாவது வரிசையில் இறங்குவாரா? அல்லது நான்காவது வரிசையில் இறங்குவாரா? என்பது கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ரோஹித் சர்மா, கோலி எந்த இடத்தில் களமிறங்குகிறார் என்பதை பொறுத்தே ராகுல் எந்த வரிசையில் களமிறங்குவார் என்பது உறுதி செய்யப்படும் என ரோஹித் தெரிவித்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண், விராட் கோலி மூன்றாவது வரிசையில் களமிறங்கி இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளை தேடித்தந்துள்ளார். ஆனால் அதேநேரத்தில் ராகுலின் ஃபார்மை தவிர்த்துவிட முடியாது. ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ராகுல் ஏற்படுத்துவார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடுவரிசையில் பல வீரர்களை களமிறக்கி பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் போன்றோருக்கு சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ராகுல் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரை மூன்றாவது வரிசையில் இறக்கிவிட்டு, கோலி நான்காமிடத்தில் இறங்கலாம் என லட்சுமண் தெரிவித்துள்ளார்.