இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோற்றதற்கான காரணத்தை கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க வீரர்கள் ராய் மற்றும் பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பிறகு களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இயன் மோர்கன் அரைசதம் கடந்து அவுட்டானார். கடந்த போட்டியில் கைகொடுத்த ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இந்த போட்டியில் சோபிக்கவில்லை. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய வில்லி அரைசதம் அடித்தார். நிதானமாக ஆடி, இங்கிலாந்து அணியின் ரன் குவிப்பிற்கு உதவிய ஜோ ரூட் சதமடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 322 ரன்களை குவித்தது. 

323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக தொடங்கினார். ஆனால் கடந்த முறை சதமடித்த ரோஹித் சர்மா, 15 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து ஷிகர் தவான், 36 ரன்களிலும் ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். நல்ல ஃபார்மில் இருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 3 பேரும் அடுத்தடுத்து வெளியேறியது. இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதன்பிறகு கோலியும் ரெய்னாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினாலும், அவர்களும் ஆட்டமிழந்துவிட இந்திய அணியால் வெற்றி பெறமுடியவில்லை. 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

போட்டிக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நாங்கள் சிறப்பாகவே ஆடி வருகிறோம். ஆனால் இன்றைய நாள் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததுதான் பெரிய பாதிப்பாக அமைந்தது. அதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. மோயின் அலியும் அடில் ரஷீத்தும் சிறப்பாக பந்துவீசி, நெருக்கடியை அதிகப்படுத்தினர் என கோலி தெரிவித்தார்.