இங்கிலாந்துக்கு நாங்கள் வந்திருப்பதால், அந்த அணிக்குத்தான் நெருக்கடியும் பயமும் இருக்கும். எங்களுக்கு அவையெல்லாம் கிடையாது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. முதல் டி 20 போட்டி இன்று தொடங்குகிறது. 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து தொடர் குறித்து பல கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய கோலி, நாங்கள் எந்தவித அழுத்தமும் பயமும் இல்லாமல் இருக்கிறோம். நாங்கள் இங்கிலாந்திற்கு வந்திருப்பதால் அந்த அணிக்குத்தான் பயமும் நெருக்கடியும் இருக்கும்.

சிறந்த அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது சிறப்பானது. அந்த வகையில், இங்கு ஆடுவதால், அந்த அணிக்குத்தான் அழுத்தமே தவிர எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் கிடையாது. ஜோஸ் பட்லர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல்லில் தொடக்க வீரராக களமிறங்கி அவரது திறமையை நிரூபித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடியுள்ளார். ஆனால் அதை பார்த்து நாங்கள் வியப்படையவில்லை. கிறிஸ் வோக்ஸ், மோயின் அலி ஆகியோரும் ஐபிஎல்லில் ஆடியதால் அவர்களுடன் நல்ல நட்பு உள்ளது. அதே நட்புடன் இரு அணியினரும் ஆடினால் இந்த தொடர் சிறப்பானதாக அமையும். 

இங்கிலாந்து காலநிலை எங்களுக்கு ஒத்துப்போகும் என்று நினைக்கிறேன். புஜாரா, இஷாந்த் சர்மா ஆகியோர் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியதால் அவர்கள் இந்த சூழலுக்கு ஏற்கனவே தயாராகிவிட்டனர். நாங்களும் தயாராகிவிடுவோம். 

பேட்டிங் வரிசையில் பல சோதனை முயற்சிகள் செய்ய உள்ளோம். அனைவருக்கும் ஆடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். எதிரணிக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையிலான மாற்றங்கள் செய்யப்படும். ஒருநாள் போட்டிகளிலும் சில சோதனைகள் செய்ய உள்ளோம். அது உலக கோப்பைக்கு உதவியாக அமையும். வெற்றி பெறுவோம் என்ற மனநிலை இருப்பதுதான் முக்கியம். அந்த மனநிலையில் ஆடினால் வெற்றி பெறுவோம். அதுதான் தென்னாப்பிரிக்க தொடரிலும் நடந்தது. போட்டி முடிவுகள் குறித்து உறுதியளிக்க முடியாது. எனினும் நல்ல கிரிக்கெட்டை ஆட விரும்புகிறோம் என கோலி தெரிவித்தார்.