இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த கோலி, பல சாதனைகளை வாரி குவித்துள்ளார்.

இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிரான 2014 டெஸ்ட் தொடரில் 10 இன்னிங்ஸிலும்(5 போட்டிகள்) சேர்த்தே 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கோலி, இந்த முறை முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்து அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் இது கோலியின் முதல் டெஸ்ட் சதம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 22வது சதம். 

இந்த சதத்தின் மூலம் பல சாதனைகளை குவித்துள்ளார் கோலி. அந்த சாதனைகளின் பட்டியலை பார்ப்போம்.. 

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாமிடத்தை பிடித்துள்ளார் கோலி. நேற்று கோலி அடித்தது கேப்டனாக அவர் அடித்த 15வது டெஸ்ட் சதம். இந்த பட்டியலில் 25 சதங்களுடன் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், 19 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 15 சதங்களுடன் மூன்றாவது இடத்தை ஆலன் பார்டர்(ஆஸ்திரேலியா), ஸ்டீவ் வாக்(ஆஸ்திரேலியா) மற்றும் ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலியா) ஆகியோருடன் கோலி பகிர்ந்துகொள்கிறார்.

2. குறைந்த இன்னிங்ஸ்களில் 22 டெஸ்ட் சதத்தை அடித்த வீரர்களின் பட்டியலில் டான் பிராட்மேன்(58 இன்னிங்ஸ்), சுனில் கவாஸ்கர்(101 இன்னிங்ஸ்), ஸ்டீவ் ஸ்மித்(108 இன்னிங்ஸ்) ஆகியோருக்கு அடுத்தபடியாக கோலி நான்காமிடத்தை பிடித்துள்ளார். 113 இன்னிங்ஸ்களில் கோலி 22 சதங்களை அடித்துள்ளார். கோலிக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர்(114 இன்னிங்ஸ்) உள்ளார்.

3. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் கேப்டனாக, ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் அசாருதீனுக்கு அடுத்து கோலி உள்ளார். 1990ம் ஆண்டு அசாருதீன் 179 ரன்கள் குவித்துள்ளார். 149 ரன்களுடன் கோலி இரண்டாமிடத்தில் உள்ளார்.