சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழும் விராட் கோலி மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரில் யார் மிகச்சிறந்த வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக் பிரேர்லி காரணத்துடன் விளக்கியுள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் அறியப்படுகின்றனர். இவர்களில் மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரராக திகழ்பவர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களையும் சதங்களையும் குவித்து வருகிறார். ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில்(டெஸ்ட், ஒருநாள், டி20) 57 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக திகழ்கிறார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

தற்போது இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் விராட் கோலி அபாரமாக ஆடி, ஒரு இன்னிங்ஸில் சதம் மற்றும் மற்றொரு இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் சிறப்பாக ஆடினர். 

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியும் ரூட்டும் சிறந்த வீரர்களாக வலம்வரும் நிலையில், இருவரில் யார் சிறந்த வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக் பிரேர்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மைக், ஜோ ரூட் சிறந்த பேட்ஸ்மேன் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் ரூட்டை விட கோலி தான் சிறந்த வீரர். அரைசதத்தை சதமாக மாற்றுவதில் கோலி வல்லவர். அந்த விஷயத்தில் ரூட்டை விட கோலி சிறந்தவர். அரைசதத்தை சதமாக மாற்றும் விஷயத்தில் கோலியிடம் இருந்து பின் தங்குகிறார் ரூட் என மைக் பிரேர்லி தெரிவித்துள்ளார்.