இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.82,45,000 சம்பாதிப்பதாக, வியப்பான தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். டிவி பார்ப்பதுபோல இந்த பழக்கமும், மக்களின் தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. குறிப்பாக, நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்கு, இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பு உள்ளது. அந்த பிரபலங்கள் பதிவிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும், பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ், கமென்ட் போடுகின்றனர்.

அப்படி பிரபலங்கள் போடும் புகைப்படங்களை, விளம்பர நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை பிரபலபடுத்தவும் பயன்படுத்துகின்றன. பிரபலங்களின் ரசிகர்கள் பலம் மற்றும் லைக்ஸ், ஷேர் செய்வதை பொறுத்து, அவர்கள் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் தருகின்றன. இதன்படி, இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஹாப்பர்ஹெச்க்யு என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஹாலிவுட் பிரபலம் கைலி ஜென்னர் முதலிடத்தில் உள்ளார். அவர் ஒரு ஸ்பான்சர் பதிவு வெளியிட 10 லட்சம் அமெரிக்க டாலர்களை வாங்குகிறார். 2வது இடத்தில் உள்ள செலினா கோமஸ் 8 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார்.

இதற்கடுத்த இடங்களில், கிம் கார்டாஷியன், பியான்ஸ் நோவல்ஸ், ட்வெய்ன் ஜான்சன், ஜஸ்டின் பீபர், நெய்மர், லியோனல் மெஸ்ஸி, கென்டால் ஜென்னர் உள்ளிட்டோர் உள்ளனர். இந்த பட்டியலில், இந்தியா சார்பாக, நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 17வது இடம்பிடித்துள்ளார். அவர் வெளியிடும் ஒரு ஸ்பான்சர் பதிவுக்கு, ஒரு லட்சத்து 20 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில், 82,45,000 சம்பாதிக்கிறார்.

இந்திய இளைஞர்களிடையே விராட் கோலிக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் தங்களது பொருட்களை விளம்பரம் செய்ய முன்வருவதால், அவருக்கு இந்த வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் வருமானம் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக, ஆய்வு நடத்திய ஹாப்பர்ஹெச்க்யூ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.