இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறது, ஆனால் கேப்டன் விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  விராட் கோலி குறித்து, நேஷனல் ஜியாக்ரபி சேனலில் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.

விராட் கோலி எந்த விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசும் குணமுடையவர் என்றாலும்  அவரின் தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் இதுவரை அவர் வெளிப்படையாக பேசியதில்லை.

ஆனால் அந்த ஆவணப்படத்தில் தனது தனிப்பட்ட பல நிகழ்வுகளையும், தான் கதறி அழுத சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு நான் டெல்லி ரஞ்சி அணியில் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் இரவு நைட்வாட்ச்மேனாக களமிறங்கி 40 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்ததாக கூறியுள்ளார்.

மறுநாள் நான் பேட்டிங் செய்ய வேண்டும். மைதானத்தில் நீண்ட நேரம் அணி வீரர்களுடன் இருந்து பேசிவிட்டு வீட்டுக்கு அதிகாலை 3 மணிக்கு வந்தேன்.வந்த சிறிது நேரத்தில் என் தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுத் துடித்தார்.

நான் உடனே எழுந்து சென்று அவரைத் தாங்கிப்பிடித்தேன். என் தந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு பக்கத்து வீட்டுக்கார்களை உதவிக்கு அழைத்தேன், டாக்டருக்கு போன்செய்தேன், ஆம்புலன்ஸ்சுக்கும் போன் செய்தேன். ஆனால், அது இரவு நேரம் என்பதால், ஒருவர் கூட எழுந்து வரவில்லை. அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் என் தந்தையின் உயிரும் என் கையிலேயே பிரிந்தது அந்தத் தருணத்தை என்னால் மறக்க முடியாது, நான் கண்ணீர் விட்டு கதறிய நேரமிது என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்..

அதன்பின் எனக்குள் தன்னம்பிக்கை அதிகரித்தது, கிரிக்கெட் மீதான பார்வை கூர்மையடையத் தொடங்கியது. என்னுடைய கனவுகளையும், என் தந்தையின் கனவுகளையும் நனவாக்க என்ன செய்யவேண்டுமோ அதற்காக நான் கடுமையாக உழைத்தேன், என் சக்தி எல்லாம் செலவு செய்தேன் என்று தெரிவித்தார்.

தனது தந்தை இறந்த மறுநாள் அனைவரும் விராட் கோலி கிரிக்கெட் விளையாடச் செல்லமாட்டார் என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், டெல்லி, கர்நாடக அணியின் ரஞ்சிக்கோப்பை போட்டியில் தந்தையின் உடலை வீட்டில் கிடத்திவிட்டு விராட் கோலி கிரிக்கெட் விளையாடி, தன்னைப் பற்றி மற்றவர்களின் நினைப்பைப் பொய்யாக்கினார் என ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.