உலகக் கோப்பை போட்டி நடத்தும் ரஷியாவையே 3-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று உருகுவே முதலிடத்தில் கர்ஜிக்கிறது.

உலகக் கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை பெறுவதற்கான ஆட்டம் உருகுவே - ரஷிய அணிகள் இடையில் சமாரா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இதுவரை உருகுவேயுடன் நடந்த 8 ஆட்டங்களில் ரஷியா 6 முறை வென்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் இரண்டு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன. 

போட்டியை நடத்தும் ரஷிய அணி கால்பந்து தரவரிசையில் 70-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் உருகுவே 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வலுவான அணியாகும். 

ஆட்டம் தொடங்கியவுடன் இரண்டு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவு 10-வது நிமிடத்தில் உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் ஸ்வாரஸ் ப்ரீ கிக் மூலம் அடித்த பந்து ரஷிய கோல்கீப்பர் அகின்பீவை தாண்டி கோலானது. 

பின்னர் 23-வது நிமிடத்தில் ரஷிய நட்சத்திர வீரர் டெனிஸ் செரிஷேவ் கார்னர் மூலம் வந்த பந்தை தடுக்க தலையால் முட்டியபோது, எதிர்பாராத விதமாக ரஷிய கோல்கம்பத்தில் நுழைந்து சேம்-சைட் கோலானது. 

இப்படி முதல்பாதி ஆட்ட நிறைவில் உருகுவே 2-0 என முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாம் பாதியில் ரஷிய அணி பதிலுக்கு கோலடிக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. 

90-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பு மூலம் கிடைத்த பந்தை உருகுவே வீரர் கோடின் அடித்தபோது ரஷிய கோல்கீப்பர் அகின்பீவ் தடுத்தார். ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் பந்தை எடின்சன் அடித்து அதை கோலாக்கினார். 

இதன்மூலம் 3-0 என கணக்கில் உருகுவே அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 9 புள்ளிகளுடன் உருகுவே முன்னிலையில் உள்ளது.