இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. 

இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா ஏ அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ஏ ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாததால், லீக்கில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி வெளியேறியது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் மோதின. இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே வெஸ்ட் இண்டீஸுடனான இரண்டு போட்டிகளிலும் அந்த அணியை வீழ்த்தின. 

இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் மோதிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் இந்தியாவும் மற்றொன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 

இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடர் முழுவதுமே இளம் வீரர்களான பிரித்வி ஷா, மயன்க் அகர்வால் ஆகியோர் சிறப்பாக ஆடிவருகின்றனர். தீபக் சாஹரும் அருமையாக பந்துவீசிவருகிறார். 

இங்கிலாந்து லயன்ஸ் அணியும் சிறப்பாகவே விளையாடிவருகிறது. இதற்கு முன்னர் மோதிய இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், இறுதி போட்டியில் வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன.