உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் - டென்மார்க் அணிகள் இடையிலான ஆட்டம் சமனில் முடிவடைந்ததால் இரு அணிகளும் நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

உலக கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சி பிரிவில் பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. இந்த ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. 

மாஸ்கோவின் லுஷ்னிகி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்த முனைந்தன. ஆனால் முதல் பாதி முடியும் வரை இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை. 

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்கள் கோலடிக்க முயன்றும் அவர்களின் முயற்சி வீணானது. இதனால் 0-0 என ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

பிரான்ஸ் ஏற்கெனவே நாக் ஔட் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில் இந்த ஆட்டத்தில் வென்றால்தான் டென்மார்க் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை நீடித்தது.

அதன்படி இந்த ஆட்டம் சமனில் முடிந்ததால் டென்மார்க் அணி நாக் ஔட் சுற்றுக்கு முன்னேறியது. 

சி பிரிவில் இருந்து பிரான்ஸ் அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் 5 புள்ளிகள் பெற்றது. 

உலகக் கோப்பையில் இதுவரை இரண்டு முறை இரு அணிகளும் மோதியதில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பது கூடுதல் தகவல்.