ஆடுகளத்தில் பந்தின் தன்மையை மாற்றும் மோசடி வீரர்களுக்கு 6 டெஸ்ட் போட்டி அல்லது 12 ஒரு நாள் போட்டிகள் வரை விளையாட தடை விதிக்கப்படும் என்று ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

ஆடுகளத்தில் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தும் வீரர்களால் சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் குழுவுக்கு (ஐ.சி.சி.) பெரும் தலைவலியாக உண்டாகியுள்ளது. 

எடுத்துக்காட்டாக, மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் காகிதம் போன்ற பொருளை கொண்டு பந்தை சேதப்படுத்தியது. 

கடந்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்தியது போன்றவை அடக்கம்.

"பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு அபராதத்துடன் ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாட தடை விதிப்பது போதாது அதனை அதிகப்படுத்த வேண்டும்" என்று ஐசிசியிடம் கோரப்பட்டது. 

அதன்படி, இதுகுறித்து அயர்லாந்தின் டப்ளின் நகரில் 5 நாட்கள் நடந்த ஐ.சி.சி. ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

இதன் முடிவில் பந்தின் தன்மையை மாற்றும் வீரருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க ஐ.சி.சி. ஒப்புக்கொண்டது. 

அதன்படி, இதுவரை பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கும் வீரர் மீது ஐ.சி.சி. நடத்தை விதி லெவல் 2–கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வந்தது. இனி அது லெவல்–3-க்கு செல்கிறது. முன்பு லெவல் 3–ன் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகும் வீரருக்கு 8 தகுதி இழப்பு புள்ளி வழங்கப்படும். அது 12 தகுதி புள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்படி பந்தின் தன்மையை மாற்றும் மோசடி வீரர்களுக்கு 6 டெஸ்ட் போட்டி வரையோ அல்லது 12 ஒரு நாள் போட்டிகள் வரையோ விளையாட தடை விதிக்கப்படும். 

இதேபோல தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யும் வீரர் அதற்கு என்று தனியாக கட்டணம் செலுத்தும் முறையையும் ஐ.சி.சி. அறிமுகப்படுத்துகிறது. அப்பீல் வெற்றிகரமாக அமைந்தால் செலுத்தப்படும் தொகை திரும்ப வழங்கப்படும்" என்று ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.