குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்துக்கு இடையே முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.  உலகின் மிகப்பெரிய மைதானமான  மெல்பர்ன் மைதானத்தை விட பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் சிறப்புகள் இதோ.. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட் போட்டி 5 இருபது ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல்  இரண்டு டெஸ்ட் போட்டிகள்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும்  வெற்றி பெற்றன. இதனை  அடுத்து மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள  மொடேரா சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் பகலிரவு போட்டியாக பிங்க் நிற பந்தில் நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேரா சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம்  பேர் அமரும் வகையில் உருவாக்க பட்டுள்ளது. 

முதலில்  49 ஆயிரம் பேர் அமரும் வகையில்  இருந்த இந்த மைதானம் மறு சீரமைப்பு செய்து  உலகின் மிகப்பெரிய மைதானமான  மெல்பர்ன் மைதானத்தை விட பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் அதி நவீன வசதிகள் உள்ளன. உலகிலேயே வேறு எந்த மைதானத்திலும் இல்லாத வகையில் இந்த  மைதானத்தில் வீரர்களுக்காக 4 டிரெஸ்ஸிங் ரூம்கள் அதில் ஒவ்வொன்றுக்குமாக தனித்தனியே உடற்பயிற்சிக் கூட வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மைதானத்தில் இல்லாத வகையில் மைய ஆடுகளங்களில் பயன்படுத்தப்படும் மண்ணே, பயிற்சி ஆடுகளங்களிலும் பயன்படுத்தப்பட்டு பிரதான மைதானம் தவிர, பயிற்சிக்கென தனியே 2 மைதானங்கள் உள்ளன. 

அது தவிர பயிற்சிக்கென தனியே 9 ஆடுகளங்களும் உள்ளரங்கு ஆடுகளங்களில் பேட்டிங் பயிற்சிக்காக பந்துவீசும் தானியங்கி பெளலிங் எந்திரங்கள் உள்ளன. இதர மைதானங்களில் இல்லாத வகையில் மழை நீரை மைதானத்திலிருந்து விரைவாக வெளியேற்றும் வசதிகளும் ஆட்டத்தின்போது 8 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு இருந்தாலும், நீரை விரைவாக வெளியேற்றி ஆட்டம் ரத்தாகாமல் மீண்டும் தொடங்கும் வகையில் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மைதானங்களில் விளக்குக் கம்பங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்த மைதானத்தில்  மேற்கூரை விளிம்புகளில் வட்ட வடிவில் எல்இடி "ஃப்ளட்' விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு ஆட்டங்களின்போது தெளிவான காண்புநிலை இருக்கும் வகையிலும், மைதானத்தில் நிழல் விழாத வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. 

நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கொரோனா வைரஸ் காரணமாக  மைதானத்தில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய மைதானம் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மைதானத்தில் இருக்கும்படியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் முதல் சர்வதேச போட்டி நடைபெற உள்ளதால் இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.