இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. இதையடுத்து ஒருநாள் தொடங்கியது. அதில் முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப்பின் அசத்தலான சுழல் மற்றும் ரோஹித்தின் அதிரடி சதத்தால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ராய்-பேர்ஸ்டோவின் நல்ல தொடக்கம், ஜோ ரூட்டின் நிதான சதம் மற்றும் டேவிட் வில்லியின் அதிரடி அரைசதம் ஆகியவற்றால் 322 ரன்களை குவித்தது.

இந்திய அணியில் எந்த வீரரும் சோபிக்காததால் 236 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது. ரோஹித், தவான், ராகுல் ஆகிய அதிரடி மன்னர்களை கொண்ட இந்திய அணி, அவர்கள் மூவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்து இழந்தது பெரிய பாதிப்பாக அமைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது கூடுதல் சோகம். ரோஹித் சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவர். ராகுலும் அப்படித்தான். ஆனால் ரோஹித் 15 ரன்களிலும் ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்டதால், அணியை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கோலி-ரெய்னா ஜோடியால் பந்தை தூக்கி அடிக்க முடியவில்லை. அவர்கள் நிதானமாக ஆடினர். விளைவு, இந்த போட்டியில் இந்திய அணி ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2011 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்தான் இந்திய அணி சிக்ஸர் அடிக்காமல் இன்னிங்ஸை முடித்தது. அதன்பிறகு 7 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தான் இந்திய அணி சிக்ஸர் அடிக்காமல் ஒருநாள் இன்னிங்ஸை முடித்துள்ளது.