கிடைக்கும் அரிய வாய்ப்புகளை எல்லாம் தமிழக வீரர் விஜய் சங்கர் நழுவவிட்டு கொண்டே இருக்கிறார். 

தமிழக வீரர் விஜய் சங்கர், இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு தொடரின் இந்திய அணியில் இடம்பெற்று ஆடிவருகிறார். இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி இன்று நடந்துவருகிறது. 

இதற்கு முன்னதாக நடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய இந்தியா ஏ அணியின் இளம் பேட்ஸ்மேன்கள், இந்த போட்டியில் சொதப்பிவிட்டனர். 46.3 ஓவரில் 232 ரன்களுக்கே இந்திய ஏ அணி ஆல் அவுட்டானது. 

இந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், மிடில் ஆர்டரில் களமிறங்கும் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு நடு ஓவர்களில் பேட்டிங் ஆடும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை ஒரு சதவிகிதம் கூட விஜய் சங்கர் பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். 

இளம் திறமைகளில் ஒருவரான சஞ்சு சாம்சன், யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால் இந்தியா ஏ அணியில் ஆட முடியாமல் நீக்கப்பட்டார். அப்படியிருக்கையில் அணியில் ஆட வாய்ப்பு கிடைப்பது அரிதான விஷயம். அப்படி கிடைத்தாலும் 6ம் வரிசை பேட்ஸ்மேனுக்கு மிடில் ஓவரில் பேட்டிங் கிடைப்பது பெரிய விஷயம். அப்படி கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார் விஜய் சங்கர்.

இலங்கையில் நடந்த நிதாஹஸ் கோப்பை இறுதி போட்டியிலும் கிடைத்த பேட்டிங் வாய்ப்பில் தன்னை நிரூபிக்க விஜய் சங்கர் தவறியது குறிப்பிடத்தக்கது.