இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிப்பதற்காக யோ யோ டெஸ்ட் நடத்தப்படுகிறது. 

தற்போதைய சூழலில் யோ யோ டெஸ்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. யோ யோ டெஸ்டில் தேராத வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த அம்பாதி ராயுடு, இந்திய ஏ அணியில் பெற்றிருந்த சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்கள், யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். யோ யோ டெஸ்டை மட்டும் வைத்து வீரர்களை தேர்வு செய்யக்கூடாது என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தபோதிலும், யோ யோ டெஸ்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

மாநில அணிகளின் வீரர்களுக்கும் யோ யோ டெஸ்ட் நடத்தப்படுகிறது. அந்த வகையில், தமிழக வீரர் அருண் கார்த்திக், விராட் கோலி யோ யோ டெஸ்டில் பெற்றதைவிட அதிக புள்ளிகளை பெற்று தேர்வாகியுள்ளார்.

32 வயதான தமிழக வீரர் அருண் கார்த்திக், நடந்து முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக ஆடினார். இந்த சீசனின் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் அருண் கார்த்திக் தான். இவரது சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி, தொடரை வென்றது. 

ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அருண் கார்த்திக், ஒரு மாதத்திற்கு முன்னதாக நடந்த யோ யோ டெஸ்டில் 19.2 புள்ளிகளை பெற்றதாக தெரிவித்துள்ளார். இதுதான் யோ யோ டெஸ்டில் ஒரு வீரர் பெற்ற அதிக மதிப்பெண் ஆகும். இதற்கு முன்னதாக கோலி பெற்ற 19 புள்ளிகளே அதிகபட்சமானதாக இருந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன் நடந்த யோ யோ டெஸ்டில் விராட் கோலி, 19 புள்ளிகளை பெற்றிருந்தார். 

ஃபிட்னஸுக்கு பெயர்போன விராட் கோலியைவிட ஃபிட்னஸ் டெஸ்டில் அதிக புள்ளிகளை பெற்ற அருண் கார்த்திக் யார் தெரியுமா..?

அருண் கார்த்திக் 67 முதல் தர போட்டிகளிலும் 54 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2008 முதல் 2010 வரையிலான மூன்று ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். 2011 ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடினார். முதல் தர போட்டிகளில் 2008ல் தமிழ்நாட்டு அணியில் அறிமுகமான அருண் கார்த்திக், அசாம் அணிக்காகவும் கேரளா அணிக்காகவும் கூட ஆடியுள்ளார். தமிழ்நாட்டு அணியில் முரளி விஜய், அபினவ் முகுந்த் ஆகியோருடன் ஆடியுள்ளார். 

விஜய் ஹசாரே மற்றும் உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்திவருவதாக அருண் கார்த்திக் தெரிவித்துள்ளார்.