தமிழகத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் மகனான பிரவீன், இளையோர் ஒலிம்பிக் தொடரில் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ்நகரில் இளையோர் ஒலிம்பிக் தொடர் நடந்துவருகிறது. இதில் இரு நிலைகளாக நடத்தப்பட்ட ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் ஒட்டுமொத்தமாக 31.52 (15.68 +15.84) மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். 

முதல் பகுதியில் அதிகபட்சமாக 15.84 மீட்டர் தூரமும், 2வது பகுதியில் அதிகபட்சமாக 15.68 மீட்டர் தூரமும் தாண்டினார். ஆக மொத்தம் 31.52 மீட்டர் நீளம் தாண்டிய பிரவீன் 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். சர்வதேச அளவில் பிரவீன் வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். 

கியூபாவின் அல்ஜான்ட்ரோ தியாஸ் 34.18 (17.14 + 17.04) மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். நைஜீரியாவின் இம்மானுவல் ஒயிட்ஸ் மேய்வா 31.85 (16.34 + 15.51) மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை தட்டி சென்றார். இவர்களுக்கு அடுத்து அதிக தூரம் தாண்டிய பிரவீன் வெண்கலப் பதக்கம் வென்றார். 

17 வயதான பிரவீன் சித்ரவேல் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் மகன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பிரவீனின் தந்தையின் வருமானம், தடகள பயிற்சிக்கு போதுமானதாக இல்லாததால் ஒரு சிலரின் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஏழ்மையான குடும்பம் என்றாலும், அதை தனது முயற்சிக்கும் பயிற்சிக்கும் தடையாக இல்லாத அளவிற்கு கடும் உழைப்பினால் இந்தியாவிற்கு பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் பிரவீன். 

இவர் இந்த ஆண்டு நடைபெற்ற பள்ளிகள் இடையிலான கேலோ இந்திய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் கோவையில் நடைபெற்ற தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியிருந்தார். மங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து வரும் பிரவீன் தற்போது இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணியாற்றி வரும் இந்திரா சுரேஷிடம் நாகர்கோவிலில் பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக கல்லூரி நிர்வாகம் பிரவீனுக்கு வகுப்புகளுக்கு வருவதில் இருந்து விலக்கும் அளித்துள்ளது.