ஆசிய போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தும், தகுதியிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக வெண்கல பதக்கத்தை தவறவிட்டார் தமிழக வீரர் லட்சுமணன். 

இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்துவருகிறது. மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர்கள் அசத்திவருகின்றனர். இதுவரை 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. 

10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிடைத்திருக்க வேண்டிய வெண்கல பதக்கம் கை நழுவி சென்றுவிட்டது. ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்கு இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் உள்பட 13 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

இதில், பஹ்ரைன் வீரர் ஹசன் சானி 28 நிமிடம் 35:54 விநாடிகளில் பந்தய தூரத்தை முதல் வீரராக கடந்து தங்கப் பதக்கத்தைத் தட்டினார். மற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ரஹாம் செரோபென் 29 நிமிடம் 00:29 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி வெள்ளிப் பதக்கத்தைக் வென்றார். தமிழக வீரர் லட்சுமணன் 29 நிமிடம் 44:91 விநாடிகளில் கடந்து 3வது இடம் பிடித்தார். ஆனால் போட்டியின்போது லட்சுமணன் தனது டிராக்கிலிருந்து மாறி  வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்யப்பட்டார். அதனால் மூன்றாவது இடம் பிடித்த அவருக்கு பதிலாக நான்காவது இடம்பிடித்த சீனாவின் சாங்காங் ஷாவோ வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கவனக்குறைவால் தமிழக வீரர் லட்சுமணன், மூன்றாவது இடம்பிடித்தும் கூட வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார்.