இந்தோனேஷியாவில் நடந்துவரும் ஆசிய போட்டியில் மல்யுத்த போட்டியில் 74 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார் சுஷில் குமார். 

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா மற்றும் பாலேம்பங் நகரில்  இந்தியாவில் இருந்து 572 வீரர் - வீராங்கனைகள் 36 போட்டிகளில் கலந்துகொண்டு ஆடுகின்றனர். 

இந்தியா, ஹாக்கி, டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பாட்மிண்டன், கபடி, தடகளம், மல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் இந்தியா பதக்கங்கள் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் ரவி குமார் மற்றும் அபுர்வி சண்டேலா ஜோடி வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்தது. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த போட்டியின் 74 கிலோ ஃப்ரீஸ்டைலில் முதல் சுற்றிலேயே சுஷில் குமார் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்ற சுஷில் குமார், இதுவரை ஒருமுறை கூட ஆசிய போட்டியில் தங்கம் வென்றதில்லை. இந்த முறை அந்த குறையை தீர்க்கும் முனைப்பில் களமிறங்கினார். 

முதல் சுற்றில் பஹ்ரைனின் பேடிரோவுடன் மோதினார். போட்டி தொடங்கியதும் ஆதிக்கம் செலுத்திய சுஷில் குமார், 2-0 என முன்னிலை வகித்தார். அதன் பின்னர் சுதாரித்து ஆடிய பேடிரோவ், சுஷில் குமாரை பின்னுக்கு தள்ளி 3-2 என பேடிரோவ் முன்னிலை அடைந்தார். அதன்பின்னர் சுஷில் குமாரை பாயிண்ட்ஸ் எடுக்கவிடாமல், மேலும் கூடுதலாக 2 பாயிண்ட்ஸை பெற, பேடிரோவ் 5-2 என அபாரமாக முன்னிலை பெற்றார். அதன்பின்னர் கடுமையாக போராடிய சுஷில் குமாரால் ஒரு பாயிண்ட் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து சுஷில் குமார் 3-5 என பேடிரோவிடம் தோல்வியை தழுவினார். 2006ல் தோஹாவில் நடந்த ஆசிய போட்டியில் சுஷில் குமார் வெண்கலம் வென்றுள்ளார். ஆனால் ஆசிய போட்டியில் தங்கம் வென்றதில்லை.  இம்முறையும் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

ஆனால், 65 கிலோ ஃப்ரீஸ்டைலில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, உஸ்பெஸ்கிஸ்தானின் சிரோஜிடினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல, 57 கிலோ ஃப்ரீஸ்டைலில் முதல் சுற்றில் இந்தியாவின் சந்தீப் டோமர் துர்க்மெனிஸ்தான் நாட்டின் ருஸ்டமை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

எனவே மல்யுத்த போட்டியில் ஏதாவது ஒரு பிரிவிலாவது இந்தியா பதக்கம் வெல்வது உறுதி.