Wimbledon 2024: முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறிய இந்திய வீரர் சுமித் நாகல்!
விள்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரரான சுமித் நாகல் செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சிடம் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் தொடர்களில் ஒன்று விம்பிள்டன். ஒவ்வொரு ஆண்டும் விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் (யுஎஸ் ஓபன்) டென்னிஸ் தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய இந்த தொடரில் சுமித் நாகல், ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி, யுகி பாம்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். ஜூலை 1 ஆம் தேதி நேற்று தொடங்கிய இந்த தொடர் வரும் 14 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் தரவரிசைப் பட்டியலில் 72ஆம் நிலை வீரரான இந்தியாவின் சுமித் நாகல், செர்பியா நாட்டைச் சேர்ந்த 52ஆம் நிலை வீரரான மியோமிர் கெச்மானோவிக்கை எதிர்கொண்டார்.
தனது முதல் விம்பிள்டன் தொடரில் இடம் பெற்ற சுமித் நாகல் முதல் செட்டை 2-6 என்று இழந்த நிலையில் 2ஆவது செட்டை 6-3 என்று கைப்பற்றினார். ஆனால், அதன் பிறகு நடைபெற்ற 2 செட்டுகளையும் முறையே 3-6 மற்றும் 4-6 என்று இழந்து இந்த சுற்றிலிருந்து வெளியேறினார். எனினும், நாளை நடைபெறும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் செர்பியாவின் துசன் லாஜோவிக் உடன் இணைந்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மார்டினெஸ் மற்றும் ஜௌம் மூனார் ஜோடியை எதிர்கொள்கிறார்.
சுமித் நாகல் தவிர ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி மற்றும் யுகி பாம்ரி ஆகியோரும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் போட்டி போடுகின்றனர்.