இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்த தென்னாப்பிரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையிடம் ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 278 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது. 

இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 338 ரன்கள் எடுத்தது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி வெறும் 124 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கை அணி டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து 489 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தெயூனிஸ் டி பிரைன் மட்டுமே சதமடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் சரியாக ஆடாததால் 290 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. 

இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்று, தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்தது இலங்கை அணி.