மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை இடையேயான ஆட்டம் பிரிட்ஜ் நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

இதன் 3-வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது மேற்கிந்தியத் தீவுகள். முதல் இன்னிங்ஸில் 69.3 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 74 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் குமரா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அடுத்து ஆடிய இலங்கை 59 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 42 ஓட்டங்கள் எடுத்தார். 

மேற்கிந்தியத் தீவகள் சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

முதல் இன்னிங்ஸில் 50 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற மேற்கிந்தியத் தீவுகள், 2-வது இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கெமர் ரோச் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இலங்கையின் காசன் ரஜிதா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் 144 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கை 40.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்து வென்றது. 

இதில், குசல் பெரேரா 28 ஓட்டங்கள் எடுக்க, ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அவர் ஆட்டநாயகனாகவும், சக வீரர் ஷேன் டெளரிச் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.