இரவு கிளப்புக்கு சென்றுவிட்டு தாமதமாக அறைக்கு வந்த இலங்கை அணியின் இளம் ஸ்பின்னர் ஜெஃப்ரி வாண்டர்சேவிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஓராண்டு கிரிக்கெட் ஆட தடை விதித்துள்ளது. 

இலங்கை அணி, கடந்த மே-ஜூன் மாதங்களில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடியது. அந்த தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த சில வீரர்கள், செயிண்ட் லூசியாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, இரவில் சுற்றி பார்க்க சென்றனர். 

வெளியே சென்ற வீரர்களில் ஜெஃப்ரி வாண்டர்சே என்ற இளம் ஸ்பின் பவுலரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் அறைக்கு திரும்பிவிட்டனர். ஆனால் வாண்டர்சே மட்டும் வரவில்லை. காலை வரை அவர் வரவேயில்லை.

காலையில் அவர் அறையில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், போலீஸாரிடம் புகார் அளித்தனர். காலையில் தாமதமாக அறைக்கு வந்த வாண்டர்சே, இரவு கிளப் ஒன்றுக்கு சென்றதாகவும் ஹோட்டலுக்கு திரும்ப வழி தெரியாததால் தாமதம் ஆகிவிட்டதாகவும் விளக்கமளித்து மன்னிப்பு கேட்டுள்ளார். 

வாண்டர்சேவின் செயலால் அதிருப்தியடைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக கூறி, வெஸ்ட் இண்டீஸ் தொடரின் பாதியிலேயே அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது. இந்நிலையில், தற்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் ஆட ஓராண்டு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். மேலும் ஒப்பந்த ஊதியத்தில் 20% அபராதமும் விதித்துள்ளது.