நவீன கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் ரொனால்டோவா அல்லது மெஸ்ஸியா என்ற கேள்வி நீண்ட காலமாக தொடர்ந்து வரும் நிலையில் இன்று நடைபெறும் 2  நாக் அவுட் போட்டிகளில் இந்த இருவரின் மீதே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கால்பந்து ஆட்டத்தில் பீலே, மரடோனா வரிசையில் உலகின் அடுத்த தலைசிறந்த வீரர் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியா, போர்ச்சுகளின் ரொனால்டோவா என்ற ஐயம் உலக கால்பந்து ரசிகர்களுக்கிடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதற்கு இதுவரை விடை கிடைக்காத நிலையில் ரஷ்யாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி வெற்றியாளரை நிர்ணயிக்கும் களமாக மாறிவிட்டது. 

இதுவரை மெஸ்ஸி 126 போட்டிகளில் பங்கேற்று 64 கோல் அடித்துள்ளார். அதேபோல் ரொனால்டோ 152 போட்டிகளில் பங்கேற்று 85  கோல் அடித்துள்ளார்.  இதில் ரொனால்டோ முன்னிலை வகிக்கிறார். கால்பந்து போட்டியில் மிக முக்கியமானது தங்க கால்பந்து விருது. இந்த விருதை யார் வாங்குகிறார்ளோ அவர்களை சிறந்த வீரர்கள் என்பார்கள். இதில் மெஸ்ஸி 5 முறையும், ரொனால்டோ 5 முறை சரிசமமாக வாங்கியுள்ளனர்.மெஸ்ஸி 2009 முதல் 2012 வரை தொடர்ந்து 4 முறை வாங்கியுள்ளார். ரொனால்டோ  2 வருடங்களுக்கு ஒருமுறை வாங்கியுள்ளார். அடுத்து தங்க காலணி விருதை மெஸ்ஸி 5 முறையும், ரொனால்டோ 4 முறை வாங்கியுள்ளார். இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் இருவரும் இருமுறை பங்கேற்றும் தங்கள் நாட்டுக்காக பெருமை மிக்க கோப்பையை வென்று தந்ததில்லை. பணம் கொழிக்கும் கிளப் ஆட்டங்களில் கோல் மழை பொழிந்து இருவரும் கோடிகளை குவித்து உலகெங்கிலும் ரசிகர்களை பெற்றுள்ளனர். ஆனால் தாய்நாட்டுக்காக உலகக்கோப்பையை வென்று தரவில்லை என்பது அவர்களின் ஆட்ட வரலாற்றில் கரும் புள்ளியாகவே இருந்து வருகிறது.   அதனால் தங்கள் தாய்நாட்டுக்கு உலகக்கோப்பை இருவரில் யார் வென்று தருகிறார்களோ அவர்களே கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்தவர்களாக கருதப்படுவார் என்று ரசிகர்களும், கால்பந்து உலகத்தினரும் முடிவெடுத்துவிட்டனர். 

2018 உலகக்கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் 4 கோல் அடித்து போர்ச்சுக்கலை நாக் அவுட் சுற்றுக்கு முதலில் அழைத்து சென்றதன் மூலம் மெஸ்ஸியை  ரொனால்டோ முந்தியுள்ளார்.  மறுபுறம் கோல் அடிக்காமல் துவண்டிருந்த மெஸ்ஸி, நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் முதல் கோலை பதிவு செய்ததுடன், நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜெண்டினா முன்னேற உதவினார். இந்த வெற்றியால் துவண்டு கிடந்த மெஸ்ஸி உற்சாகமடைந்துள்ளார். மேலும் அடுத்த சுற்றுக்கு இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளதால் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் யார் என்று உலகமே அவலுடன் எதிர்பார்க்கும் போட்டி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. நாக் அவுட் சுற்றில் இரு அணிகளும் வெல்லும் பட்சத்தில் போர்ச்சுக்கலும்-அர்ஜெண்டினா நேரடியாக மோதும் நிலை உருவாகியுள்ளது. அப்போது மெஸ்ஸியும் , ரொனால்டோவும் நேரடியாக களம் காண்பார்கள். அரையிறுத்திக்கு இரண்டில் ஏதேனும் ஒரு அணி மட்டுமே முன்னேற முடியும். மெஸ்ஸியும் , ரொனால்டோவும் கிளப்போட்டிகளில் பலமுறை எதிர் எதிராக களம் கண்டியிருந்தாலும் சர்வதேச போட்டிகளில் இதுவரை இருவரும் மோதியதில்லை. அதனால் கால்யிறுதி போட்டியில் தங்கள் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்பவரே மிகச்சிறந்த வீரர் ஆவார்.