தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் மகராஜ், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 

இலங்கை சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 124 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. அதைத்தொடர்ந்து இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில், அந்த அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் மகராஜ். ரோஷன் சில்வா விக்கெட்டை தவிர மற்ற அனைத்து விக்கெட்டுகளையுமே மகராஜ் வீழ்த்தினார். இதன்மூலம் ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க பவுலர் என்ற சாதனையை மகராஜ் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக 1995ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆலன் டொனால்ட், 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதே ஒரு இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க பவுலர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது. தற்போது அந்த சாதனையை மகராஜ் முறியடித்துள்ளார்.