இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என தென்னாப்பிரிக்க அணி தொடரை வென்றுள்ளது. 

இலங்கை சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடிவருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி வென்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தது. 

இதையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பவுலிங் தேர்வு செய்ததால் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டி காக் 2 ரன்னில் வெளியேறினார். இதையத்து ஹாசிம் ஆம்லாவுடன் அறிமுக வீரர் ரீஸா ஹெண்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. ஆம்லா 59 ரன்களில் அவுட்டானார். 

டுபிளெசிஸ் 10 ரன்களில் வெளியேறினார். டுமினி ஹெண்டிரிக்ஸ் ஜோடி நன்றாக ஆடியது. அறிமுக போட்டியிலேயே சதமடித்த ஹென்ரிக்ஸ் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். 92 ரன்கள் குவித்து சதமடிக்காமல் அவுட்டானார் டுமினி. தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 363 ரன்களை குவித்தது.

சாதனை சதம்:

அறிமுக போட்டியிலேயே சதமடித்த ஹென்ரிக்ஸ், ஒரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 88 பந்துகளில் ஹென்ரிக்ஸ் சதமடித்தார். இதன்மூலம் அறிமுக போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை ஹென்ரிக்ஸ் படைத்துள்ளார்.

இலங்கை தோல்வி:

364 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியில் தனஞ்செயா டி சில்வா மட்டுமே 87 ரன்கள் குவித்தார். மற்ற யாருமே அரைசதம் கடக்கவில்லை. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், அந்த அணி 45.2 ஓவரில் 285 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, ஒருநாள் தொடரை 3-0 என வென்றது. இந்த தோல்வியின் மூலம், தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை அணி தொடர்ச்சியாக 11 போட்டிகளில் தோற்றுள்ளது.