தென்னாப்பிரிக்க அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று ஆடிவருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வென்றது. 

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 ஓவருக்கு உள்ளாகவே வெறும் 36 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

குசால் பெரேரா மற்றும் திசாரா பெரேரா ஆகிய இருவரும் அணியை மீட்டெடுத்தனர். திசாரா பெரேரா 49 ரன்களையும் குசால் பெரேரா 81 ரன்களையும் எடுத்து அவுட்டாகினர். இதையடுத்து அந்த அணி, 34.3 ஓவருக்கு 193 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 194 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் மார்க்ரமை தவிர மற்ற வீரர்கள் குயிண்டன் டி காக், டு பிளெசிஸ், டுமினி ஆகியோர் நன்றாக ஆடினர். 31 ஓவரில் இலக்கை எட்டி தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தென்னாப்பிரிக்க அணியின் ரபாடா மற்றும் ஷாம்சி ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.