தனது விலா எலும்பை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உடைக்க சொன்னதாக இந்திய சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் இடத்தை சாஹலும் குல்தீப்பும் நிரப்பியுள்ளனர். இந்த இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களும் தங்கள் பணியை செவ்வனே செய்துவருகின்றனர். அதிலும் சைனாமேன் என அழைக்கப்படும் குல்தீப் யாதவ் அசத்தலாக வீசிவருகிறார்.

இந்நிலையில், வாட் த டக் என்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது குல்தீப் யாதவ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது நடந்த சம்பவம் ஒன்றை குல்தீப் பகிர்ந்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய குல்தீப் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு தரம்சாலாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நான் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, என் விலா எலும்பை உடைக்குமாறு அந்த அணியின் கேப்டன் ஸ்மித், பவுலர் பாட் கம்மின்ஸுக்கு ஆலோசனை கூறினார்.

அடுத்த இன்னிங்ஸில் சரியாக பந்துவீச முடியாத அளவிற்கு அவரது விலா எலும்பை உடை என கம்மின்ஸிடம் ஸ்மித் தெரிவித்தார். அவரும் பவுன்ஸர்களாக வீசினார் என குல்தீப் தெரிவித்துள்ளார்.

அந்த குறிப்பிட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் நான்கு விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தினார். அந்த கோபத்தில்தான் குல்தீப் பேட்டிங் ஆடியபோது விலா எலும்பை உடைக்க சொல்லியுள்ளார் ஸ்மித்.