கத்திச் சண்டை, குத்துச் சண்டை, சேவல் சண்டை, காளைச் சண்டை, ஆட்டுச் சண்டை உள்ளிட்ட பலவகையான சண்டைகளை பார்த்திருப்பீர்கள். இந்த சண்டைகளுக்கு இணையாக பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது கன்னத்தில் அறையும் சண்டை. இதற்கான சாம்பியன்ஷிப்பும் உண்டு என்பது இன்னொரு கூடுதல் தகவல்.

எதிரெதிராக இருவர் நின்று கொண்டு கன்னத்தில் அறைய வேண்டும். அப்போது, அடிவாங்குபவர் நிலைகுலையாமல் அடியை பொறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடி வாங்கியவர், எதிரே இருக்கும் போட்டியாளரின் கன்னத்தில் அறைவார். இதுதான் விதி. ஒருவருக்கு 5 முறை அறைவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். சமீப காலமாகத்தான் கிர்கிஸ்தானில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது, ஃபைட் கிளப் படத்தில் வருவதைப்போல.ஆனால் கிர்கிஸ்தானின் கிளைவிட்ட இந்தபோட்டி இப்போது ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவி வருகிறது.

சமீபத்தில் கிர்கிஸ்தானில் உள்ள பிஸ்பெக் என்ற இடத்தில் கன்னத்தில் அறைவதற்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், 10 மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். அதில், அமன் அய்தராவ் என்ற 23 வயது இளைஞர் சாம்பியன் பட்டம் பெற்றார். அவருக்கு ஆயிரத்து 150 பவுண்டுகள் பரிசாக வழங்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய். 

இந்த போட்டியில் பங்கேற்ற பலருக்கும் கன்னம் பழுத்தது, பற்கள் தெறித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த விளையாட்டை பலரும் காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறது என்று விமர்சிக்கின்றனர்.இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முன்னாள் அறைதல் வீரர் வசிலி கமாட்ஸ்கி, “பலரும் இந்த விளையாட்டை காட்டுமிராண்டித் தனம் என்கிறார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்களை அதிக எண்ணிக்கையிலானோர் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதை வைத்தே இதன் வெற்றியைப் புரிந்துகொள்ளமுடியும்’என்கிறார்.