இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

போட்டியின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய வீரராக கோலி திகழ்வார் என்பதில் ஐயமில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து பல சாதனைகளை முறியடித்துவருகிறார் கோலி. சச்சின் டெண்டுல்கரின் ரன் சாதனையை கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோலி மிகச்சிறந்த வீரராக வலம்வரும் போதிலும், இங்கிலாந்தில் அவரது கடந்த காலம் சிறப்பானதாக அமையவில்லை. கடந்த 2014ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. அந்த தொடரை இந்திய அணி 3-1 என இழந்தது. அந்த தொடரில் 10 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே கோலி வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

எனவே இந்த முறை சிறப்பாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் கோலி உள்ளார். அதற்காக தீவிர பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். கோலி, கடந்த 2014 சுற்றுப்பயணத்தின் போது 10 இன்னிங்ஸ்களில் 7 முறை எட்ஜ் ஆகி ஸ்லிப்பிட கேட்ச் கொடுத்துத்தான் அவுட்டானார். அதை கிண்டல் செய்யும் விதமாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று, வீடியோவை வெளியிட்டது. 

இந்நிலையில் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், கோலி எப்போதுமே ரன்களை குவிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். அவர் தனது தவறுகளை உணர்ந்து அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிப்பவர். களத்தில் தான் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள உடனடியாக பயிற்சி மேற்கொள்வார். அவரது அந்த குணம் மிகச்சிறந்தது. ஏற்ற இறக்கங்களை பற்றி கவலைகொள்ளாமல் கோலி சிறப்பாக ஆட வேண்டும் என சச்சின் தெரிவித்துள்ளார்.