முரளி விஜய் அவுட்டான ஆண்டர்சனின் அவுட் ஸ்விங் பந்தை எப்படி ஆட வேண்டும் என்ற ஹர்பஜனின் கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவருகிறது. மழை காரணமாக ஒருநாள் தாமதமாக நேற்று தொடங்கப்பட்ட போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. 

லார்ட்ஸ் ஆடுகளம் புற்களுடன் இருந்ததால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. எனவே முதலில் பேட்டிங் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பவுலர்களின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி, விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிலும் அதிக அனுபவமிக்க பவுலரான ஆண்டர்சனின் பந்துவீச்சை எதிர்கொள்ள மோசமாக திணறினர். தனது அனுபவத்தையும் ஆடுகளத்தின் தன்மையையும் நன்றாக பயன்படுத்திக்கொண்ட ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 107 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். ஆண்டர்சன் வீசிய அவுட் ஸ்விங்கில் முரளி விஜய் போல்டாகி வெளியேறினார். முரளி விஜய் ஸ்விங் ஆகும் பந்துகளை திறம்பட ஆடுவார் என்றாலும், அந்த குறிப்பிட்ட பந்தை அருமையாக வீசினார் ஆண்டர்சன். 

இந்நிலையில், முரளி விஜய் அவுட்டான வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த ஹர்பஜன், இந்த பந்தை எப்படி ஆட வேண்டும் என சச்சினிடம் கேட்டிருந்தார். 

அதற்கு சச்சின் அளித்த பதிலில், ஆண்டர்சன் வீசியது மிகவும் அருமையான டெலிவரி.. ஆனால் நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் உங்களது தூஸ்ரா பந்தில் அவுட்டானவர்களும் என்னிடம் கேட்டார்கள் என சச்சின் பதிலளித்துள்ளார்.