முதல் ரன்னை எடுக்க, இதுவரை இரண்டு முறை 70 நிமிடங்களுக்கு மேல் எடுத்துள்ளார் புஜாரா. இதுதொடர்பாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி, புஜாரா ஆகியோர் ரன் குவிப்பது இந்திய அணியின் வெற்றிக்கு அவசியம். 

புஜாரா மிகத்திறமை வாய்ந்த வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்கு அளப்பரியது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடும் விதமாக அதன் முன்னோட்டமாக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவருகிறார் புஜாரா.

சூழ்நிலையை கருத்தில்கொண்டு நிதானமாக ஆடி அணியை மீட்டெடுக்க வேண்டியது டெஸ்ட் வீரரின் கடமை. அந்த கடமையை புஜாரா பல சமயங்களில் திறம்பட செய்துள்ளார். சில நேரங்களில் ரன்னே எடுக்காமல் களத்தில் அதிகநேரம் நிற்பார். முதல் ரன்னை எடுக்கவே அதிகமான நேரத்தையும் பந்தையும் எடுத்துக்கொள்வார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 79 நிமிடங்கள் களத்தில் நின்று, 54வது பந்தில் முதல் ரன்னை எடுத்தார். அதேபோல கவுண்டி போட்டியில் யார்க்‌ஷைர் அணிக்காக ஆடும் புஜாரா, சர்ரே அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் 73 நிமிடங்கள் களத்தில் நின்று 42வது பந்தில் தான் ரன் கணக்கத்தை தொடங்கினார். 

முதல் ரன்னை எடுக்க இரண்டு முறை 70 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது புஜாரா மட்டும்தான். இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேசிய சச்சின், புஜாராவின் இந்த இன்னிங்ஸ்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார். 

அப்போது பேசிய சச்சின், புஜாரா ஆடியது ரொம்ப அதிமான ஒன்றுதான். ஆனால் நான் விமர்சிக்கவில்லை. கள சூழலை புரிந்துகொண்டு அதற்கு மதிப்பளித்து ஆடுவது முக்கியம்தான். களத்தில் இருக்கும் வீரர்தான், சூழலை புரிந்துகொண்டு ஆடவேண்டும். ஓய்வறையில் இருந்துகொண்டு எதுவும் சொல்லக்கூடாது என சச்சின் தெரிவித்தார். 

சச்சின் பொதுவாக எந்த வீரரையும் விமர்சிக்க மாட்டார். ஆனால் புஜாரா முதல் ரன் எடுக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதை விமர்சிக்கும் வகையில் பேசிய அடுத்த நொடியில், விமர்சிக்க விரும்பவில்லை எனவும் அதற்காக ஒரு விளக்கமும் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.