இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முதன்முறையாக குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார். சீனியர் ஸ்பின்னர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜாவும் அணியில் உள்ளனர். ஆனால் ஆடும் லெவனில் இடம்பெறப்போகும் ஸ்பின்னர் யார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. இரண்டு ஸ்பின்னர்கள் என்றால், அஷ்வினும் குல்தீப்பும் ஆடுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

இங்கிலாந்தில் முதன்முறையாக ஆடும் குல்தீப், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக வீசினார். அதனால் டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. இந்த தொடரில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பிலும் உள்ளது. 

இந்நிலையில், இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசினார். குல்தீப்பின் பவுலிங்கை ஜோ ரூட் சமாளித்து ஆடினார். ஆனால் அவரைப்போலவே மற்ற வீரர்களும் சமாளித்து ஆடுவர் என்று நான் நினைக்கவில்லை. இங்கிலாந்தின் தற்போதைய சூழலை பொறுத்தவரையில், வெயிலால் ஆடுகளம் காயும் நேரங்களில் குல்தீப்பால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

அதேநேரத்தில் ஆடுகளம் புற்களோடு இருந்தால், இங்கிலாந்து பவுலர்கள் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவார்கள். நன்றாக ஸ்விங் செய்யும் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனது இந்திய அணிக்கு பின்னடைவுதான். எனினும் மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவர் என சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.