இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. இதையடுத்து நடந்த முதல் 2 ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. 

அதனால் தொடர் சமநிலையில் உள்ளது. இன்று நடக்க இருக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். இரு அணிகளுமே தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளன. 

தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி என்பதால், இந்த போட்டியில் இந்திய அணியில் சித்தார்த் கவுலுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடிய சித்தார்த் கவுல் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தவில்லை. இந்நிலையில், புவனேஷ்வர் குமார் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட காட்சியை பிசிசிஐ, டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. அதனால் புவனேஷ்வர் குமார் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

அதேபோல, ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 

ஒருநாள் தொடரை வெல்ல இந்திய அணி அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இங்கிலாந்திற்கு எதிர்மறையான சம்பவம் நடந்துள்ளது. அந்த அணியின் அதிரடி மற்றும் தொடக்க வீரரான ஜேசன் ராய், இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடிக்க முயலும் போது கையில் காயம் ஏற்பட்டது.

எனவே அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் மூன்றாவது போட்டியில் ஆட உள்ளார். நல்ல ஃபார்மில் உள்ள ராய், அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்க வல்லவர். எனவே அவர் இல்லாதது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கலாம். இங்கிலாந்தில் ராய் போவதும், இந்தியாவிற்கு புவனேஷ்வர் குமார் வருவதும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.